
ஆன்லைன் கேமிங் தடை சட்டத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க நிறுவனங்கள் திட்டம்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025 ஐ எதிர்த்து, ரியல் மணி கேமிங் (RMG) நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றன. இந்த மசோதா அனைத்து பண விளையாட்டுகளுக்கும் முழுமையான தடை விதிப்பதால், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகின்றன. ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று சட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், சட்டப் போராட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே இந்த மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், இது போன்ற திடீர் தடை, புதுமைகளைத் தடுக்கும். மேலும், இது இந்திய நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு நகர்த்தி, பயனர்களை சட்டவிரோத சந்தைகளுக்குத் தள்ளும் என்றார்.
கர்நாடகா
கர்நாடகாவில் வழக்கு தொடுக்க திட்டமிடுவது ஏன்?
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள், இந்த மசோதாவை எதிர்த்துப் போராடுவதற்கு சாதகமான சூழலை வழங்குவதாக தொழில்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர். 2022 இல், கர்நாடக உயர் நீதிமன்றம், திறன் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய முயன்ற கர்நாடக காவல் சட்டத்தின் திருத்தங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. திறன் சார்ந்த விளையாட்டுகளுக்கும், அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறியத் தவறியதால் அந்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, புதிய மத்திய மசோதாவுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை இங்கேயே தொடர ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.