ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?
நடப்பு நிதியாண்டில் (FY24) ரிசர்வ் வங்கியின் இரண்டாவது நிதிக் கொள்கைக் கூட்டத்தை இன்று கூட்டியது நிதிக் கொள்கைக் குழு. இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ஏற்கனவே இருக்கும் அதே 6.5%-த்திலேயே தக்க வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டிற்கான GDP வளர்ச்சியானது 6.5% இருக்கும் என ஏற்கனவே கணித்திருந்தது ரிசர்வ் வங்கி. அந்த கணிப்பு மாற்றப்படாமல் அப்படியே தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் சில்லரைப் பணவீக்கமானது, 5.1%-ஆக இருக்கும் எனக் கணித்திருக்கிறது RBI. இந்த அளவு முன்னர் 5.2%-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒட்டுமொத்த பணவீக்க அளவானது RBI-யின் இலக்கான 4% மேல் இருப்பதாகவும், இந்த நிதியாண்டு முழுவதும் அப்படியே தொடர வாய்ப்பிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுவது என்ன?
இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ். உலக நாடுகளிடையே இருக்கும் பிரச்சினைகள் காரணமாக உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். மேலும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரமும், இந்திய நிதித்துறையும் நிலைத்து நிற்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். ரிசர்வ் வங்கியானது மாறி வரும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துறையை நிலைத்தன்மையுடன் வைத்திருக்க தேவையான மாற்றங்களைக் கொண்டு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.