ராஜஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொலை
ராஜஸ்தானின் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று மதியம் 1.45 மணியளவில் கோகமேடி தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, அந்தவழியாக ஸ்கூட்டரில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் கோகமேடி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு புல்லட் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுக்தேவ் சிங் கோகமேடி உயிரிழந்ததுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கருத்து
ராஜஸ்தானின் ஒரு முக்கிய ராஜபுத்திரத் தலைவரும் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் நிறுவனருமான சுக்தேவ் சிங் கோகமேடி தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார். "நான் போலீஸ் கமிஷனரிடம் பேசி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்," என்று அவர் கூறியுள்ளார். ராஜஸ்தானில் இரண்டு நாட்களுக்கு முன் தான் பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தை குற்றமற்ற மாநிலமாக மாற்றுவது பாஜக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.