போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார்
தேசிய மக்கள் கட்சி (NPP) தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வான்வீரோய் கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினர் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் ஆரம்பித்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும், தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதனால், மொத்த இறப்பு எண்ணிக்கை 713ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, 400 இஸ்ரேலியர்களும் 313 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், புனித யாத்திரைக்காக ஜெருசலேமுக்கு பயணம் செய்த எம்பி கர்லுகி, அவரது மனைவி, மகள் மற்றும் 24 இந்தியர்கள் பெத்லகேமில் சிக்கிக்கொண்டனர்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளார் மேகாலயா முதல்வர்
இஸ்ரேலில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன்(MEA) தொடர்பில் இருப்பதாக NPP மேலாளரும் மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். மேகாலயாவை சேர்ந்த அந்த எம்பி, அவரது குடும்பத்தினர் மற்றும் 24 இந்தியர்களை இன்று இரவுக்குள் இந்திய தூதரகம் எகிப்துக்கு வெளியேற்றும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலில் சிக்கித் தவித்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா இன்று காலை பத்திரமாக இந்தியா திரும்பியதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கான அறிவுரையை நேற்று வெளியிட்டது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த அறிவுரையில் கூறப்பட்டிருந்தது.