சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, செங்கோட்டை-தாம்பரம், வேளாங்கண்ணி-எர்ணாகுளம் செல்லும் ரயில்கள் சிவகங்கை ஸ்டேஷனில் நிற்பதில்லையாம். மேலும் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு பகல்நேர ரயில் சேவை கிடையாது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு சிவகங்கை மாவட்டம் ரயில் திட்டங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள போவதாக கடந்த 20ம் தேதி, அனைத்து கட்சிகள், வணிகர்கள் மற்றும் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
தனியார் பயணியர் வாகனங்கள் ஏதும் இயக்கப்படவில்லை
அதன்படி, இன்று(செப்.,23) சிவகங்கையில் ரயில்கள் நிறுத்தப்படாததால் மத்திய அரசினை கண்டித்து அனைத்து கட்சியினர், வணிகர்கள் உள்ளிட்டோர் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிவகங்கை முழுவதும் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக நடந்த இதுகுறித்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கடைகளையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூட முடிவு எடுத்துள்ளனர். அதேபோல், ஆட்டோக்கள், மினி வேன்கள் போன்ற தனியார் பயணியர் வாகனங்களும் இயக்கப்படாது என்றும் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.