நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று(ஆகஸ்ட் 8) பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. நரேந்திர மோடி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இன்றிலிருந்து 3 நாட்களுக்கு மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம், வாக்கெடுப்பு போன்றவை நடக்க இருக்கும் நிலையில், நாடாளுமன்றக் கட்சி கூட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை நாடாளுமன்றத்தில் வைத்து இந்த பாஜக கூட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூர் வன்முறைகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இரண்டு தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை மக்களவையில் தாக்கல் செய்தன.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மக்களவையில் பேசுவாரா?
இன்று நடைபெற இருக்கும் விவாதத்திற்கு பிறகு எடுக்கப்படும் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற்றால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவி விலக வேண்டி இருக்கும். ஆனால், எதிர்க்கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை மக்களவையில் குறைவாகவே இருப்பதால், இதில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற வாய்ப்பில்லை. இருந்தாலும், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை பேச வைத்தற்கு இது வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மணிப்பூரில் 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை கலவரங்களால் இதுவரை குறைந்தது 160-பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அங்கு நடந்துவரும் கலவரங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதை எதிர்த்து தான் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.