'ஆட்சி மாறினால் ஜனநாயகத்தை சிதைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்': ராகுல் காந்தி சூளுரை
வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இந்நிலையில், அது நடந்து சில மணி நேரங்களுக்குள், வருமான வரித் துறையால் காங்கிரஸுக்கு இன்று ரூ.1,800 கோடிக்கு மேல் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2017-18 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான நோட்டீஸ் இதுவாகும். அந்த நோட்டீஸில் அபராதம் மற்றும் வட்டி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.200 கோடி அபராதம் விதித்து காங்கிரஸின் நிதியை முடக்கியதால் காங்கிரஸ் ஏற்கனவே நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு எந்த நிவாரணமும் கிடைக்காததால், அக்கட்சி உச்ச நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது.
ராகுல் காந்தியின் உத்தரவாதம்
ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சிகளின் நிதியை முடக்குவதற்காக பாஜக வருமான வரித்துறையை பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகத்தை சிதைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். "அரசாங்கம் மாறும்போது, 'ஜனநாயகத்தை சிதைப்பவர்கள்' மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்! மேலும் இதையெல்லாம் செய்ய யாருக்கும் தைரியம் வராத வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம்" என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து, ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.