பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி
கர்நாடகா மாநிலத்தில் வரும் 10ம்தேதி 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ளது. கர்நாடகத்தில் தற்போது இந்த தேர்தலினையொட்டி அம்மாநில அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். அதன்படி இந்த பிரச்சாரமானது இன்று(மே.,8)மாலை 6 மணியளவில் நிறைவுப்பெறுகிறது. இதனையடுத்து 6 மணிக்குமேல் தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்கவேண்டும். அதேபோல் நட்சத்திர பேச்சாளர்களும் 6 மணியோடு தொகுதிகளை விட்டுவெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, பெங்களூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக இயல்பாக சேர்ந்து வாக்குகளை சேகரித்தார். பெங்களூரில் கன்னிங்காம் சாலையில் உள்ள காபிஷாப் ஒன்றுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த அவர் பேருந்துநிறுத்தத்துக்கு சென்றுள்ளார்.
சக பயணிகள் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்
அங்கு சென்றஅவர், பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவர் உரையாடினார். அதனையடுத்து அவர்களோடு பேருந்தில் பயணமும் செய்துள்ளார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளான பெண்களுக்கு இலவசப்பேருந்து சேவை மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறியுள்ளார். அதனையடுத்து பேருந்து பயணங்களில் தங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் குறித்தும், விலைவாசியுயர்வு ஆகியன குறித்து ராகுல்காந்தியிடம் பெண்கள் கூறியுள்ளார்கள். லிங்காராஜபுரம் என்னும் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி அங்கிருந்த பொதுமக்களிடம் காங்கிரஸ் வெற்றிப்பெறவேண்டிய அவசியம் குறித்து எடுத்துக்கூறினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த பயணத்தின்பொழுது, ராகுல்காந்தியோடு பயணம்செய்த சகபயணிகள் அவர்களோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.