கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை
ஒவ்வொரு வருடமும் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை, பிரிட்டனைச் சேர்ந்த குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்(கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டை விட இந்தியா சார்பில் கூடுதலாக 30 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஆசிய அளவில் இந்தியா,148, சார்பில் அதிக பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா,133, ஜப்பான்,96, ஆகிய நாடுகள் உள்ளன. முதல்முறையாக இத்தரவரிசையில் நேபால், மியான்மர், கம்போடியா நாட்டு பல்கலைக்கழகங்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகங்களில் தரவரிசை எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?
கியூஎஸ் நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், உலக பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தரவரிசையை, கடந்த 16 ஆண்டுகளாக இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள்-மாணவர்கள் விகிதாச்சாரம், பேராசிரியர்கள் சமர்ப்பித்துள்ள ஆய்வு இதழ்கள், வெளிநாட்டு, மாணவர்களின் விகிதாச்சாரம் குறித்த 11 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள 25 நாடுகளைச் சேர்ந்த 824 பல்கலைக்கழகங்கள், இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளது.
இந்திய அளவில் சிறந்த பல்கலைக்கழகமான ஐஐடி பாம்பே
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே, ஆசிய அளவில் 40வது சிறந்த கல்லூரியாகவும், இந்திய அளவில் சிறந்த கல்லூரியாக முதல் இடத்தையும் பெற்றுள்ளது. மேலும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம்(IISc), ஐஐடி சென்னை, ஐஐடி கான்பூர், ஐஐடி டெல்லி, ஐஐடி கரக்பூர் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. ஆசிய அளவில் சீனாவைச் சேர்ந்த பீக்கிங் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், ஹாங்காங் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஐஐடி சென்னை 53வது இடத்தையும், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,163, கோவை பாரதியார் பல்கலைக்கழகம்,171, சென்னை அண்ணா பல்கலைக்கழகம்,179, ஆகிய இடங்களை பெற்றுள்ளது.