கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களை விடுவிப்பு
கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 இந்திய கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு இன்று (12 பிப்ரவரி) அதிகாலை அறிவித்தது. இவர்கள் 18 மாத சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களுள் 7 பேர் ஏற்கனவே இந்தியா திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிக்கைப்படி,"கத்தாரில் சிறை வைக்கப்பட்டிருந்த தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரியும் எட்டு இந்திய பிரஜைகளின் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது. அவர்களில் 8 பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த பிரஜைகளின் விடுதலை மற்றும் சொந்த நாட்டிற்கு திரும்புதலுக்கு வழிவகுத்த கத்தார் அரசின் அமீர் செயல்படுத்திய முடிவை நாங்கள் பாராட்டுகிறோம். " என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையிலிருந்து மரணதண்டனை வரை!
கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகியோர் கத்தார் அரசுக்கு எதிராக உளவு பார்த்தமைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தஹ்ரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் கத்தாரில், இத்தாலிய U212 ஸ்டெல்த் நீர்மூழ்கிக் கப்பல்களை, கத்தார் எமிரி கடற்படைப் படையில் பயன்படுத்த உதவினார்கள். அக்டோபர் 26, 2023 அன்று கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பால் அதிர்ச்சிஅடைந்த இந்தியா, அனைத்து சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அப்போது கூறியது.
நாடு திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்
அதனை தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட இராஜதந்திர தலையீட்டின் பலனாக, கடந்த டிசம்பர் மாதம் அவர்களின் மரண தண்டனை குறைக்கப்பட்டது. தற்போது நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள், தங்களை விடுவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். "நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நிச்சயமாக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், ஏனெனில் இது அவரது தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே சாத்தியமானது" என்று அவர்களில் ஒருவர் கூறினார்.