அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை ஜனாதிபதி உடனே திரும்ப பெறவேண்டும் - செல்வப்பெருந்தகை
செய்தி முன்னோட்டம்
கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் அண்மையில் தமிழ்நாட்டினை அமைதிப்பூங்கா என்று எப்படி கூற முடியும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு தற்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் ஆங்காங்கே நடக்கும் செயல்களை சுட்டிக்காட்டி கவர்னர் தமிழ்நாட்டினை எவ்வாறு அமைதிப்பூங்கா என்று கூறமுடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் திராவிடமாடல் காலாவதியான கொள்கை என்றும் கூறியுள்ளார்.
இதற்கு எனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றையத்தினம் பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் 8மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த 2பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து எல்லாம் கவர்னர் கருத்து கூறமாட்டார்.
ஏனெனில் அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது என்று கூறியுள்ளார்.
கவர்னர்
கவர்னரின் சர்ச்சை கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கிறது
மேலும் அவர் பேசுகையில், கவர்னர் தான் வகிக்கும் பொறுப்பிற்கு ஏற்ப கருத்துக்களை கூறவேண்டும்.
மாறாக அந்த பதவிக்கு அவமதிப்பு செய்யும் வகையில் செயல்படக்கூடாது.
தமிழ்நாடு, தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு மக்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி அதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கத்தினை மத்தியஅரசும், கவர்னரும் நிறைவேற்றிக்கொள்கிறார்களா என்னும் சந்தேகம் எனக்கு எழுகிறது.
கவர்னர் கூறும் சர்ச்சை கருத்துக்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
கவர்னர் என்பவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனை அடிப்படையில் செயல்பட வேண்டுமென அரசியல் சாசனம் வகுத்துள்ளது.
அத்தகைய அரசியல் சாசனத்தினை மீறும் கவர்னரை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.