26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி
2008 மும்பை தாக்குதல், இந்திய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் ஆகும். நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) காரணமாக கூறப்பட்டது. பத்து ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் அரபிக் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து நடத்திய இந்த ஒருங்கிணைந்த தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர், 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலின் 15 வது நினைவு நாளான இன்று, இந்தியாவின் குடியரசு தலைவரும், பிரதமரும் அஞ்சலி செலுத்தினர். மேலும், மும்பை காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.