
டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை
செய்தி முன்னோட்டம்
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் மழை நீரினை தேங்க விடாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எனினும், ஆங்காங்கே மழை நீரானது தேங்கியுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு தேங்கியுள்ள மழை நீரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினை ஏற்படுத்தும் ஏடிஎஸ் கொசுக்களின் உற்பத்தியானது அதிகரிக்கும் சூழலானது தற்போது ஏற்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை
போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள உத்தரவு
எனவே, ஆரம்பக்கட்டத்திலேயே இந்த ஏடிஎஸ் வகை கொசுக்களின் உற்பத்தியினை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவலை குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவின் படி, டெங்கு காய்ச்சல் அதிகளவில் கண்டறியப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சேகரித்து உடனே தகவல் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல், இந்த டெங்கு காய்ச்சலுக்கான போதிய அளவிலான மருந்து, மாத்திரைகளை கையிருப்பில் வைத்து கொள்ளுமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.