ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை; பிரணாப் முகர்ஜியின் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பரபரப்பு
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி ராகுல் காந்தியை அரசியல் ரீதியாக இன்னும் முதிர்ச்சியடையவில்லை என தெரிவித்ததாக அவரது மகளின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜியின் மகளும், முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான ஷர்மிஸ்தா முகர்ஜி தனது தந்தையின் புகழ்பெற்ற வாழ்க்கையைப் பற்றிய தனது வரவிருக்கும் புத்தகத்தில், பிரணாப் முகர்ஜியின் நாட்குறிப்பு குறிப்புகள் மற்றும் தன்னுடன் விவாதித்த தனிப்பட்ட சம்பவங்களை கொண்டு ஒரு புத்தகம் எழுதியுள்ளார். பிரணாப், மை ஃபாதர்: எ டாட்டர் ரிமெம்பர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம், பிரணாப் முகர்ஜியின் டைரி குறிப்புகளில் ஒன்றைக் குறிப்பிடுகிறது. அதில் ராகுல் காந்தியை அமைச்சரவையில் சேர்ந்து அனுபவம் பெறுமாறு பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி குறித்து பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜியிடம் 2004ல் பிரதமராகும் வாய்ப்புகள் குறித்து கேட்டபோது அவர் அளித்த பதிலை ஷர்மிஸ்தா தனது புத்தகத்தில் நினைவு கூர்ந்தார். 2004 தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி கட்சிகளின் ஆதரவு சோனியா காந்திக்கு இருந்தாலும், அவர் பிரதமர் பதவியிலிருந்து ஒதுங்கி விட்டார். இதையடுத்து, பிரணாப் முகர்ஜி மற்றும் மன்மோகன் சிங் போன்ற பெயர்கள் பிரதமர் பதவிக்கு அடிபட்ட நிலையில், சோனியா காந்தி தனக்கு அந்த பதவியை கொடுக்க மாட்டார் என பிரணாப் முகர்ஜி தன்னிடம் தெரிவித்ததாக ஷர்மிஸ்தா கூறியுள்ளார். 2004இல் அடுத்த பிரதமராக அறிவிக்கப்படாததால் அவரது தந்தை ஏதேனும் ஏமாற்றம் அடைந்தாரா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு பதிலளித்த அவர், எதிர்பார்ப்பு இல்லை என்றால், ஏமாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.