சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்
செய்தி முன்னோட்டம்
சென்னையை அடுத்துள்ள போரூரில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடைசி வாய்ப்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்த தஷ்வந்த், தனது சொந்த தாயையும் அடித்து கொன்றுவிட்டு தலைமறைவானார். பின்னர் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு, 2018-இல் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
விடுதலை
உச்ச நீதிமன்ற விடுதலை மற்றும் அரசின் நடவடிக்கை
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கின் போதிய ஆதாரங்கள் இல்லை எனச் சுட்டிக்காட்டி 2025-இல் அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக தாய் கொலை வழக்கிலும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில், தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் இறுதி வாய்ப்பாக மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.