இன்று முதல், பொங்கலுக்கான சந்தை கோயம்பேடில் தொடங்குகிறது
அடுத்த வாரம் தை மாதம் பிறக்கவுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு எங்கும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பலரும் முனைப்பாக தயாராகி வருகின்றனர். மார்கழி மாதத்தின் இறுதியை போகி பண்டிகையாக கொண்டாடி, தை பிறப்பதை பொங்கலாக கொண்டாடுவது மரபு. புது கரும்பு, பச்சரிசி, மஞ்சள் என பொங்கலுக்கென ஒரு தனி படையல் உண்டு. இந்த பொங்கல் பொருட்களுக்கான விற்பனை, தற்போது பொங்கல் சிறப்பு சந்தையாக, கோயம்பேடில் இன்று முதல் துவங்குகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கோயம்பேடு சந்தையில் பொங்கல் சிறப்புச் சந்தை 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு சந்தை கோயம்பேடு சந்தையின் தென்மேற்கு பகுதியில் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறுகிறது.
மொத்த விலையிலும் விற்கப்படும் பொங்கல் பொருட்கள்
கோயம்பேடில் உள்ள இந்த பொங்கல் சந்தையில், கரும்பு கட்டுகள், மஞ்சள் மற்றும் இஞ்சிகொத்துகள் மட்டும் மொத்தவிலையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றவை சில்லறை விற்பனையாக விற்கப்படும் என செய்திகள் கூறுகின்றன. பொங்கலுக்கு தேவையான வாழைக் கன்று, மண்பானை, வாழை இலை, வாழைக்கன்று, வாழைப் பழம், மாங்கொத்து, தோரணம், மொச்சைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு,கருணைக் கிழங்கு, பூசணிக்காய், தேங்காய், பழவகைகள்,பூக்கள் போன்றவை, காய்கறி,பழம் மற்றும் மலர் சந்தைகளில் வாங்கிக்கொள்ளுமாறு கோயம்பேடு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.