அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்(இசிஐ) கவனத்திற்கு சென்றுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பிலிருந்தும் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. தேர்தல் பிரச்சார உரைகள் மூலம் வெறுப்பை பரப்பியதாக ராகுல் காந்தி மீது பாஜகவும், பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77யின் கீழ் அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட உள்ளன.
ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி செய்ததாகக் கூறப்படும் அத்துமீறல்க்ளின் விவரங்களை தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் பகிர்ந்து கொண்டது. ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று ECI கோரியுள்ளது. இந்த நோட்டீஸை வழங்கும் போது, உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ECI குறிப்பிட்டது. "அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பிரச்சாரகர்களின் நடத்தைக்கு முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளை வகிப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.