
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் தமிழக காவல்துறை பொது மக்களுக்கு சில பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 31ம் தேதி இரவு மக்கள் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் ஒன்று கூடுவதை தவிர்த்து வீட்டில் குடும்பத்தாருடன் புத்தாண்டை வரவேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அறிக்கை
விபத்துகளை தவிர்த்து உயிர்சேதங்களை குறைக்கும் நோக்கில் நடவடிக்கை
மேலும், புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் 31ம் தேதி மாலை முதல் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்காவல் படையினர், உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள நிலையில், வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்படும்.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொது இடங்களில் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதி மற்றும் 1ம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் ஒன்றுகூடி குளிக்க அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
விபத்துகளை தவிர்த்து உயிர்சேதங்களை குறைக்கும் நோக்கில் மது அருந்தி வாகனம் ஓட்டிவந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
அறிக்கை
பைக் அல்லது கார் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
அதிவேகமாக வாகனம் செலுத்தினாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் அப்பகுதிகளில் நியமிக்கப்படவுள்ள நிலையில், அங்கு எவரேனும் பிரச்சனை செய்ய முயன்றால் கைது செய்யப்படுவார்கள்.
நட்சத்திர விடுதிகளில் காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றியே கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும்.
பைக் அல்லது கார் ரேஸில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரவு நேரத்தில் நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவோர் விபத்துகளை தவிர்க்க 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வாகனத்தினை நிறுத்தி தேநீர் அருந்திவிட்டு செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை
கேமரா பொருத்திய ரோந்து வாகனம் கொண்டு கண்காணிக்கப்பு
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை கேமரா பொருத்திய ரோந்து வாகனம் கொண்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
திருட்டு சம்பவங்களை தவிர்க்க வெளியூர் செல்வோர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்படும் பட்சத்தில் பூட்டிய வீட்டின் முன்னர் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்டவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவசர உதவி தேவைப்படுவோர் 'காவல் உதவி' என்னும் செயலியை பயன்படுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
அசம்பாவிதங்கள் ஏதும் இல்லா புத்தாண்டை கொண்டாட அனைவரும் தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.