சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனை: பிரதமர் மோடி ஆலோசனை
சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 21) இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சூடானில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது என்றும் தற்போதைக்கு சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றும் இந்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. சூடான் நாட்டின் இராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே நடந்த சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில், அந்நாட்டின் தலைநகர் கார்ட்டூமில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி தவித்து கொண்டிருக்கின்றனர்.
சூடானில் 4,000 இந்தியர்கள் சிக்கி தவிப்பு
அந்நாட்டில் தற்போது கிட்டத்தட்ட 4,000 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சூடானில் உள்ள இந்தியர்களின் நிலைமையை மறுஆய்வு செய்வதற்கு இன்று நடத்தப்பட இருக்கும் உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க இருக்கிறார். சூடானில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த இந்த சண்டையால், கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து மில்லியன் மக்கள் வசிக்கும் கார்டூமில் இதற்கு முன் நிறைய கடுமையான போர்கள் நடந்துள்ளன. தற்போது கார்டூமில் வசிப்பவர்கள் மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் தங்கள் வீடுகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.