பிரதமர் நரேந்திர மோடி இன்று பிலிப்பைன்ஸ் பயணம்: 23-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியரின் அழைப்பின் பேரில் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு ASEAN அமைப்பிற்குத் தலைமை தாங்கும் பிலிப்பைன்ஸ், நவம்பர் 17-ஆம் தேதி நடத்தவுள்ள 23-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி பங்கேற்கும் 13-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு இதுவாகும்.
முக்கியத்துவம்
கடல்சார் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம்
கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற நிலையில், தற்போது நேரில் கலந்துகொள்கிறார்.
மணிலாவில் அதிபர் மார்கோஸ் அளிக்கும் இரவு விருந்து, உலகத் தலைவர்களுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்திய வம்சாவளியினருடனான சந்திப்பு ஆகியவற்றிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
2026-ஆம் ஆண்டை இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் 'ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக' அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உச்சி மாநாடு
உச்சி மாநாடுகளில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய விவகாரங்கள்
'ஆசியான்-இந்தியா செயல் திட்டம் 2026-2030' செயல்படுத்தப்படும் விதம் மற்றும் விரிவான வியூகக் கூட்டாண்மை (CSP) குறித்துத் தலைவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
பேரிடர் மீட்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் புதிய ஒத்துழைப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திரமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான (UNCLOS உட்பட) இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்துவார்.
மேலும், பயங்கரவாதம், எல்லை தாண்டிய குற்றங்கள், சைபர் மோசடிகள், ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி ஆகியவற்றுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தவுள்ளது.
வளர்ச்சித் திட்டம்
மூன்று தசாப்த கால உறவும் வளர்ச்சித் திட்டங்களும்
இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின்' ஆணிவேராக ஆசியான் உள்ளது.
1992-இல் தொடங்கிய இந்த உறவு, 2022-இல் விரிவான வியூகக் கூட்டாண்மையாக உயர்ந்தது.
மேலும், தென்கிழக்கு ஆசிய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (TAC) 50-வது ஆண்டு நிறைவும், 2027-இல் அமையவுள்ள ஆசியான்-இந்தியா உறவின் 35-வது ஆண்டு விழாவும் இக்கூட்டணியின் வலிமையைப் பறைசாற்றுகின்றன.
2014 முதல் ஆசியான்-இந்தியா நிதி, பசுமை நிதி மற்றும் டிஜிட்டல் எதிர்கால நிதி மூலம் 100-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு 35 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது.
10 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் 120 கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் 220 ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
500-க்கும் மேற்பட்ட ஆசியான் மாணவர்களுக்கு நாளந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.