மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்ற லக்பதி தீதி சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு அரசாங்கத்தின் லக்பதி தீதி முயற்சியின் கீழ் நிதி சுதந்திரம் பெற்ற 11 லட்சம் புதிய லக்பதி தீதி பெண்களை கௌரவித்தார். இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எடுத்துரைத்த பிரதமர், தனது அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் மூன்று கோடி பெண்களை இலக்காகக் கொண்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் மோடி ₹2,500 கோடி சுழல் நிதியை வெளியிட்டார். மேலும் 2.35 லட்சம் சுயஉதவி குழுக்களில் உள்ள 25.8 லட்சம் உறுப்பினர்களுக்கு ₹5,000 கோடி வங்கிக் கடன்களை வழங்கினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டம்
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேபாளத்தில் பேருந்து விபத்தில் ஜல்கானில் இருந்து பலர் உயிரிழந்ததில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மகாராஷ்டிராவின் கலாச்சார பாரம்பரியத்தில் பெருமிதம் தெரிவித்த அவர், இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்கை வலியுறுத்தினார். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் முத்ரா யோஜனா உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு அரசாங்க முயற்சிகளை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம் என்று வலியுறுத்திய மோடி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.