BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மோடி, இந்திய-சீன எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து சீன அதிபர், ஷி ஜின்பிங்குடன் உரையாடியிருக்கிறார். 2020ம் ஆண்டு, வடக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்திய மற்றும் சீன வீரர்களிடையே நடைபெற்ற சிறு மோதலைத் தொடர்ந்து, LAC (Line of Actual Control) பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்த எல்லைப் பகுதியில், சீனா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களைக் குவித்த நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் சீன வீரர்களின் அத்துமீறலைத் தடுக்க, இந்தியாவும் ஆயிரக்கணக்கான வீரர்களை இப்பகுதியில் குவித்திருக்கிறது. பிரிக்ஸ் மாநாட்டின் போது சந்தித்துக் கொண்ட இருநாட்டுத் தலைவர்களும் இந்த பதற்றமான சூழ்நிலையை குறித்து உரையாடிக் கொண்டதாகத் தெரிகிறது.
சீன அதிபரிடம் அமைதியை வலியுறுத்திய மோடி:
சீன அதிரபருடனான உரையாடலின் போது, LAC மற்றும் பிற இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் இருநாடுகளுக்கிடைய உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதனை மோடி வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் க்வாத்ரா. LAC-யினை மதித்து நடப்பதும், எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதும் இரு நாடுகளுக்குமிடையேயான உறவை சுமூகமாக்க மிகவும் அவசியம் என்பதையும் மோடி வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், LAC-யின் மேற்குப் பகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து இந்தியா மற்றும் ராணுவ உயர்அதிகாரிகளுக்கிடையே நடைபெற்ற 19வது சுற்று சந்திப்பில், பிரச்சினைகளைக் களைவதற்கான நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாவும் தெரிவித்துள்ளார் வினய் க்வாத்ரா.