பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி
'சக்தி' கருத்துக்காக தன்னை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி கொடுத்துள்ளார். தனது கருத்துகளின் அர்த்தத்தை பிரதமர் திரித்து பேசுவதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, "நான் உண்மையை பேசுகிறேன்" என்பது பிரதமருக்கே தெரியும் என்றும் கூறினார். மும்பையில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) தான் இந்த நாட்டின் சக்தி என்றும், அவை இல்லாமல் பிரதமர் மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார். "ஒரு சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அது என்ன சக்தி தெரியுமா? ராஜாவின்(பிரதமர் மோடி) ஆன்மாவே EVM என்ற சக்தியில் தான் உள்ளது." என்று பிரதமரை நேற்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
பிரதமர் தனது வார்த்தைகளை திரித்து பேசுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) மட்டுமல்லாமல், அமலாக்கத்துறை, CBI, மற்றும் வருமான வரித் துறை உள்ளிட்ட நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் பிரதமரின் கைக்குள் இருப்பதாக நேற்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். மேலும், அந்த சக்திக்கு எதிராக தான் போராடுவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், ராகுல் காந்தி இந்து மதத்தின் 'சக்தி'யை எதிர்த்து பேசுவதாக இன்று குற்றம் சாட்டிய பாஜக தலைவர்கள். ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், இன்று பிற்பகல் ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசிய மோடி, 2024 பொது தேர்தல், 'சக்தியை' அழிக்க நினைப்பவர்களுக்கும் சக்தியை வழிபடுபவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று கூறினார். இந்நிலையில், பிரதமர் தனது வார்த்தைகளை திரித்து பேசுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.