நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நேரில் ஆய்வு செய்ய கேரளாவின் வயநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி
கடந்த மாதத்தில் கேரளாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து,பிரதமர் மோடி நாளை மறுதினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படுமா?
நாளை மறுநாள், அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம் கேரளா செல்லும் பிரதமர் மோடி கண்ணூரில் தரையிறங்குகிறார். பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். பிரதமர் மோடி பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாற்றிய பின்னர், மத்திய அரசு சார்பாக நிவாரணம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.