ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு வர உள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, திருச்சியில் நடக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதை தொடர்ந்து அங்கு நடக்கும் விழாவில் பங்கேற்கும் பிரதமர், விமானம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளில் ₹ 19,850 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர்
தொடர்ந்து நடக்கும் விழாவில், திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முனையத்தை அவர் திறந்து வைக்கிறார். ₹1,100 கோடியில், கட்டப்பட்டுள்ள இரண்டு நிலை புதிய சர்வதேச முனைய கட்டிடம், ஆண்டுக்கு 44 லட்சம் பயனாளிகளை கையாளும் வகையிலும், பரபரப்பான சமயங்களில் 3,500 பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. மேலும் அவர் புதிதாக போடப்பட்ட 5 சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் NH 332A இல் முகையூர் முதல் மரக்காணம் வரையிலான சாலை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.தூத்துக்குடி காமராஜர் துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்ட கார்கோ பெர்த்-II, ₹9,000 கோடிக்கு படிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்கள், என்ஐடியில் புதிய மாணவர் விடுதி ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.
லட்சத்தீவுகளில் ₹1,150 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
அதன் பின்னர் அன்று மாலையே லட்சத்தீவுகளில் அகத்தி பகுதிக்கு சென்று, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அடுத்த நாள் ஜனவரி 3ம் தேதி லட்சத்தீவில் கவரட்டிக்கு பயணிக்கும் பிரதமர், அங்கு தொலைத்தொடர்பு, குடிநீர், சூரிய சக்தி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் சுமார் ₹ 1,150 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக, பிரதமர் மோடி லட்சத்தீவுகளில் இணைய சேவையின் வேகத்தை அதிகரிக்க, கடல் வழியாக ஒளியிழை(ஆப்டிகல் பைபர்) மூலம் இணையம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இது தற்பொழுது முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பிரதமர் திறந்து வைக்கிறார். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, கடலுக்கு அடியில் ஆப்டிக் பைபர் கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படுகிறது.