பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை
பிரதமர் மோடி இன்று தமிழகத்துக்கு வருகை தரவுள்ளார். கடந்த 3 மாதங்களில், பிரதமர் தமிழகத்திற்கு வருகை தருவது இது 4வது முறையாகும். கடைசியாக, பல்லடத்தில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் அமைந்துள்ள இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு, பின்னர் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர், கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று மதியம் 2.45 மணிக்கு. மஹாராஷ்டிராவிலிருந்து, சென்னைக்கு தனி விமானத்தில் வருகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் 144 தடை உத்தரவு
பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 29-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இன்று பொதுக்கூட்டம் நடைபெறும் காரணத்தால், முக்கிய சாலைகள், சந்திப்புகளில் தீவிர வாகன சோதனை நடந்துவருகிறது. பாதுக்காப்பு பணியில் கிட்டத்தட்ட 15,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.