LOADING...
ஏர் இந்தியா விமான விபத்து: சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி
சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி

ஏர் இந்தியா விமான விபத்து: சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 13, 2025
08:42 am

செய்தி முன்னோட்டம்

சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குறைந்தது 265 பேர் உயிரழந்தனர். வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர மற்றவர்கள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்திற்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் விழுந்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலரும் உயிரிழந்தனர். இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடவும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் சிவில் மருத்துவமனைக்குச் செல்லவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் வர உள்ளார்.

விவரங்கள்

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இதுவரை நாம் அறிந்தது

விமானத்தில் இருந்த 230 பயணிகளில், 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடியர், 12 விமான பணியாளர்கள் இருந்தனர். கொல்லப்பட்டவர்களில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். 1.25லட்சம் லிட்டருக்கும் அதிகமான ஜெட் எரிபொருள் வெடித்ததால் விபத்து நடந்த இடத்தில் வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். தீயின் தீவிரம் காரணமாக "யாரையும் காப்பாற்றுவது சாத்தியமில்லை" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஏர் இந்தியாவின் தாய் நிறுவனமான டாடா குழுமம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு முழு மருத்துவ செலவு காப்பீடு மற்றும் பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவி செய்வதாக அறிவித்துள்ளது.