Loading...
'எனக்கு நம்பிக்கை தந்த ஹனுமான் சாலிசா!' பிரதமர் மோடியுடன் பேசிய இந்திய பைலட் ஸ்மித் மச்சார் நெகிழ்ச்சி
பிரதமர் மோடியுடன் பேசிய இந்திய பைலட் ஸ்மித் மச்சார் நெகிழ்ச்சி

'எனக்கு நம்பிக்கை தந்த ஹனுமான் சாலிசா!' பிரதமர் மோடியுடன் பேசிய இந்திய பைலட் ஸ்மித் மச்சார் நெகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 02, 2026
01:57 pm

செய்தி முன்னோட்டம்

பிளைதுபாய் FZ1073 விமானத்தின் காக்பிட்டில் சக ஓமன் நாட்டு விமானியால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், காக்பிட் பூட்டைத் திறந்து 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காணொளி வாயிலாக பேசி நலம் விசாரித்தார். கேப்டன் ஸ்மித்தின் இணையற்ற துணிச்சலையும், நொடிப் பொழுதில் சாதுரியமாக முடிவெடுத்த மனத்திடத்தையும் வெகுவாகப் பாராட்டிய பிரதமர் மோடி, அவர் விரைவில் குணமடைய தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஹனுமான் சாலிசா

"ஹனுமான் சாலிசா தான் எனக்குத் தைரியம் தந்தது"

பிரதமரிடம் பேசிய போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சார், பிரதமர் மோடியே தனது மிகப்பெரிய முன்மாதிரி எனக் குறிப்பிட்டார்.

நடுவானில் காக்பிட்டில் தாக்குதலுக்கு உள்ளாகி இரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த இக்கட்டான தருணத்தில், தான் தொடர்ந்து ஹனுமான் சாலிசா மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.

உடம்பில் கடுமையான காயங்கள் இருந்த போதிலும், நாம் எழுந்திருக்காவிட்டால் அனைவரும் மடிந்துவிடுவோம் என்ற எண்ணத்தில் தான் போராடத் துணிந்ததாக கேப்டன் ஸ்மித் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

பிரார்த்தனை

140 கோடி இந்தியர்களின் பிரார்த்தனை மற்றும் தாயாருக்கு வாழ்த்து

கேப்டன் ஸ்மித்துடனான உரையாடலின் போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியர்கள் மற்றவர்களின் உயிரைப் பறிப்பவர்கள் அல்ல, பிறர் உயிரைக் காப்பாற்றத் தங்கள் உயிரையும் பணைய வைப்பவர்கள் என்பதை உலகுக்கு நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்" என்று பெருமிதத்துடன் கூறினார்.

மேலும், ஸ்மித்தின் தாயார் கீதா பென்னுடன் தொலைபேசியில் பேசியதாகக் குறிப்பிட்ட பிரதமர், பகவத் கீதையின் உயரிய கருத்துக்களை மகனுக்கு கற்பித்து வளர்த்துள்ளதாக பாராட்டினார்.

140 கோடி இந்தியர்களும் கேப்டன் ஸ்மித் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் தாயகம் திரும்ப பிரார்த்தனை செய்து வருவதாகப் பிரதமர் உறுதியளித்தார்.

ADVERTISEMENT

அபுதாபிக்கு மாற்றம்

வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர கண்காணிப்பு

சவுதி அரேபியாவின் தபூக் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆரம்பகட்ட அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கேப்டன் ஸ்மித் மச்சார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவரது உடல்நிலையை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல், மருத்துவமனைக்கு நேரில் சென்று கேப்டன் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT