கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம்
லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். போர் விதவைகளுடன் பேசவும், ஷின்குன் லா சுரங்க திட்டத்தின் முதல் குண்டுவெடிப்பை நடைமுறைப்படுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பேசியுள்ள பிரதமர் மோடி, ஜூலை 26ஆம் தேதி அனுசரிக்கப்படும் கார்கில் விஜய் திவாஸ், ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் சிறப்பான நாளாகும் என்று கூறினார். "நமது தேசத்தை பாதுகாக்கும் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் நாள் இது. ஷின்குன் லா சுரங்க திட்டத்திற்கான பணிகளும் இன்று தொடங்கப்படும்." என்று பிரதமர் மோடி கூறினார்.
ஷிங்குன் லா சுரங்க திட்டத்தின் முக்கியத்துவம்
குறிப்பாக மோசமான வானிலையின் போது லே உடனான இணைப்பை மேம்படுத்த இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. ஷிங்குன் லா சுரங்க திட்டம் 4.1 கிமீ நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது. இது நிமு-படும்-தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஷிங்குன் லா சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும். ஷிங்குன் லா சுரங்கப்பாதை ஆயுதப் படைகள் மற்றும் உபகரணங்களின் விரைவான மற்றும் திறமையான இயக்கத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.