வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பிரதமர் மோடி புருனே சென்றுள்ளார்; தீவு நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய தலைவர்
பிரதமர் நரேந்திர மோடி இன்று வரலாற்று சிறப்புமிக்க பயணமாக புருனே நாட்டுக்கு புறப்பட்டார். இரு நாடுகளுக்கும் இடையே 40 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் இருந்தபோதிலும், தீவு நாட்டிற்கு ஒரு இந்திய அரச தலைவர் மேற்கொண்ட முதல் வருகை இதுவாகும். புருனே பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 5 வரை இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் செல்கிறார். அப்போது அவர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடி அலுவலகம் Xஇல் வெளியிட்ட அறிக்கையில்,"அடுத்த இரண்டு நாட்களில், புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூருக்குச் செல்லவுள்ளார். இந்த நாடுகளில் பல்வேறு சந்திப்புகளின் போது, அவர்களுடன் இந்தியாவின் உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Twitter Post
இருதரப்பு நட்பை வலுப்படுத்த பயணம்
புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி புருனே பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது, பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும். வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அதிகாரி தெரிவிக்கையில், இந்தியாவும் புருனேயும் "பாதுகாப்பில் ஒரு கூட்டு பணிக்குழுவை" நிறுவுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறினார். "இந்தியா-புருனே தருசலாம் இராஜதந்திர உறவுகள் 40 புகழ்பெற்ற ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. மாண்புமிகு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் அவர் புறப்படுவதற்கு முன் பதிவிட்டுள்ளார்.