"மோடியின் ரசிகன் நான்", பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க் புகழாரம்!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, அங்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை சந்தித்திருக்கிறார்.
2015-ல் கலிஃபோர்னியா தொழிற்சாலையில் ஏற்கனவே ஒருமுறை எலான் மஸ்க்கை மோடி சந்தித்திருக்கும் நிலையில், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய பின்பு முதல் முறையாக தற்போது தான் சந்திக்கவிருக்கிறார்.
டெஸ்லா நிறுவனம் சீனாவிற்கு வெளியே இந்தியாவில் தங்களது தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டிருக்கும் நிலையில், மோடி மற்றும் எலான் மஸ்க்கின் சந்திப்பு அந்நிறுவனத்தின் இந்திய வருகைக்கு ஒரு முக்கிய புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி
"இந்தியாவில் டெஸ்லா கால் பதிக்கும்": எலான் மஸ்க்
பிரதமர் மோடியைச் சந்தித்த பின்பு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த எலான் மஸ்க், தான் பிரதமர் மோடியின் ரசிகன் எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேசிய அவர், "சில வருடங்களுக்கு முன்பாகவே என்னுடைய தொழிற்சாலையில் நாங்கள் சந்தித்திருக்கிறோம். எனவே, இருவருக்கும் சில வருடங்களாகவே ஒருவரை ஒருவர் தெரியும்.
மற்ற நாடுகளை விட இந்தியாவில் எங்களுக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நினைக்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, "இந்தியாவில் டெஸ்லா கால் பதிக்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். இந்தியாவில் புதிய தொழிற்சாலை தொடங்க முடிந்த அளவிற்கு விரைவாக நடவடிக்கை எடுப்போம்." எனத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
மேலும், எலானுடனான சந்திப்புக்குப் பிறகு, இருவரும் இடம்பெற்றுள்ள புகைப்படத்துடன் ட்விட்டர் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு
Great meeting you today @elonmusk! We had multifaceted conversations on issues ranging from energy to spirituality. https://t.co/r0mzwNbTyN pic.twitter.com/IVwOy5SlMV
— Narendra Modi (@narendramodi) June 21, 2023