14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 14) அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு 10,000க்கும் மேற்பட்ட பிஹு நடனக் கலைஞர்கள் நிகழ்த்தும் வண்ணமயமான பிஹு நிகழ்ச்சியை அவர் காணவுள்ளார். அசாம் சென்ற அவர், 'ரங்கோலி பிஹு'வின் முதல் நாளான இன்று ரூ.14,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அந்த மாநிலத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார். காலை 11:30 மணிக்கு லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர், கம்ரூப் (கிராமப்புற) மாவட்டத்தில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரூ.1,123 கோடி மருத்துவ வசதிகளை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கப்பட்டிருக்கும் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவாகும்.
1.1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
மேலும், நல்பாரி, நாகோன் மற்றும் கோக்ரஜார் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் திறந்து வைத்தார். 5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சைப் பலன்களை வழங்கும் ஆயுஷ்மான் அட்டைகளின் விநியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இன்று மொத்தம் 1.1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஐஐடி குவஹாத்தியின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட இருக்கும் ரூ.546 கோடி மதிப்பிலான அசாம் அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் இன்னோவேஷன் இன்ஸ்டிடியூட்க்கு(AAHII) அவர் இன்று அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும், ஸ்ரீமந்தா சங்கர்தேவா கலாக்ஷேத்ராவுக்குச் செல்லும் பிரதமர், அங்கு கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் பிளாட்டினம் ஜூபிலி நிறைவு விழாவில் கலந்துகொள்வார்.