பிபர்ஜாய் புயல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்
பிபர்ஜாய் புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூன் 12) உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்தினார். பிபர்ஜாய் புயலுக்கான தயார்நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் போது, புயல் நிலவரம் மற்றும் அதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பிபர்ஜாய் புயல் வடக்கு நோக்கி மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கே சுமார் 340 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது ஜூன் 15 ஆம் தேதி அன்று கட்ச் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 15ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை எச்சரிக்கை
கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி கொண்டிருப்பதால், குஜராத்தின் தெற்கு மற்றும் வடக்கு கடற்கரைகளில் மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 1,300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று கடலோர துவாரகா அதிகாரிகள் கூறியுள்ளனர். சவுராஷ்டிரா-கட்ச் பகுதிகளில் கடலுக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்ற உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், கட்ச் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்கரை ஓரங்களில் எச்சரிக்கை சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீண்டும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.