நாடாளுமன்ற கைகலப்பில் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்ததாகக் கூறப்படும் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிசம்பர் 19) பேசினார். டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் பற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பிரதாப் சாரங்கியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றொரு எம்பியை தன்னை நோக்கித் தள்ளினார் என்று குற்றம் சாட்டினார். இதன் விளைவாக அவர் விழுந்தார்.
காயங்களை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு
இந்த கைகலப்பில் ராஜ்புத் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் நிஷிகாந்த் துபே, வயதான நாடாளுமன்ற உறுப்பினரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் தலைவர் குண்டகார்டியை (ரவுடித்தனமான நடத்தை) நாடியதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது பாஜக எம்.பி.க்களால் தம்மைத் தடுத்து தள்ளிவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, பாஜக எம்பிக்கள் என்னை தடுத்து நிறுத்தி, என்னைத் தள்ளிவிட்டு மிரட்டினார்கள்." என்றார்.
அமைச்சர் ராகுல் காந்தியை விமர்சித்தார்
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றத்தில் பலத்தை பயன்படுத்தியதற்காக ராகுல் காந்தியை கடுமையாக சாடினார், மற்ற எம்.பி.க்களை காயப்படுத்த ராகுல் காந்தி கராத்தே, குங்ஃபூ கற்றுக்கொண்டாரா என்று கிண்டலாக கேட்டார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிஜிஜு கூறினார். முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, பாஜக எம்.பி.க்கள் மாற்று வழியில் செல்லாமல் இணையான போராட்டத்தை நடத்தியபோது கைகலப்பு தொடங்கியது. இதனால் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலான மகர் துவாரில் மோதல் ஏற்பட்டது.
சர்ச்சைக்கு காரணமான அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்து
அம்பேத்கர் குறித்துன் நாடாளுமன்றத்தில் அமித் ஷா கூறிய கருத்துக்கள் அம்பேத்கரை அவமதிப்பதாக இருப்பதை எதிர்க்கட்சிகள் கூறி போராட்டம் நடத்துவதால் கைகலப்பு ஏற்பட்டது. அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அவருக்கு எதிராக ராஜ்யசபாவில் சிறப்புரிமை தீர்மானங்களை தாக்கல் செய்தன. பிரதாப் சாரங்கி, ஒடிசா மாநிலம் பாலசோர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக உள்ளார். இவர் சமூக சேவை பின்னணி கொண்டவர் மற்றும் 2009 முதல் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.