மேடையில் கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர்; கனிமொழியின் ரியாக்ஷன்
பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினத்தில், இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மோடி. இந்த மேடையில், பிரதமர் மோடி, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுடன், தூத்துக்குடி மாவட்டத்தின் M.P.கனிமொழியும் கலந்துகொண்டார். பிரதமர் மோடி தனது உரையில், திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதோடு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி மாநில அரசு மக்களிடம் தெரிவிக்காமல் மறைத்தது எனவும் கூறினார். அத்துடன், கனிமொழி எம்.பி.யின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. வெறுமனே, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிட்டார்.
கனிமொழி கூறுவது என்ன?
விழாவினை முடித்துக்கொண்டு, கனிமொழி மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது நிருபர்களின் கேள்வி பதிலளித்த கனிமொழி,"மத்திய அரசு என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை...இதுவரை தமிழக முதல்வர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை" என்றார். "குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலம் வழங்கியது மாநில அரசுதான். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கலைஞர் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி. எங்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது" என கனிமொழி தெரிவித்தார். கனிமொழியின் பெயரை பிரதமர் மேடையில் உச்சரிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,"கலைஞரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். எங்களது பெயரை சொல்லக் கூட பிரதமருக்கு மனமில்லை. அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான்" என்றார்.