முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவையும், எம்ஜிஆர்யும் புகழ்ந்த மோடி
செய்தி முன்னோட்டம்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.
அதன் ஒரு பகுதியாக, பல்லடம் மாதப்பூரில் நடந்த 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய மோடி,"தமிழகம் வந்தபோது, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் என் நினைவுக்கு வந்தார். இலங்கையில் அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று அவர் மக்கள் பணியாற்றிய இந்த தமிழகத்துக்கு நான் வந்திருக்கிறேன்".
"பத்தாண்டு காலம் அவரது நல்லாட்சி காரணமாக, தமிழகத்துக்கு சிறந்த கல்வியும், சுகாதாரமும் கிடைத்தது. இதனால், தமிழக மக்கள் அவரை பெரிதும் மதித்தனர். இன்று வரை ஏழை மக்கள் ஒவ்வொருவரும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவராக புகழ்ந்து வருகின்றனர்" எனப்புகழ்ந்தார்.
மோடியின் உரை
ஜெயலலிதாவின் ஆட்சியையும் புகழ்ந்தார் பிரதமர்
"எம்ஜிஆருக்குப் பின்னர், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர், தமிழகத்துக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்".
"அண்மையில் தான் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். ஜெயலலிதாவுடன் பணியாற்றிய பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. எம்ஜிஆரின் கொள்கைகளைக் கடைபிடித்து மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர் ஜெயலலிதா" என்றார் பிரதமர்.
அதிமுக, பாஜகவுடனான கூட்டணியை முறித்த பிறகு அமித் ஷா,'அதிமுகவிற்கு கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்" என கூறியது நினைவிருக்கலாம்.
அதேபோல, தற்போது தேர்தல் தொகுதி பங்கீட்டில் குழப்பம் நிலவி வரும் நேரத்தில், பிரதமரின் இந்த உரை சற்று யோசிக்க வைக்கிறது.