'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு
மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் பேச உள்ளனர் என செய்திகள் வெளியாகின. அதுமட்டுமின்றி, எம்பி பதவி மீண்டும் கிடைக்கப்பெற்ற உடன், ராகுல் காந்தி, கையிலெடுக்கவிருக்கும் அரசுக்கு எதிரான முக்கிய நகர்வாக இது பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் 12 மணியளவில், நாடாளுமன்றம் வந்தடைந்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டதை போல, மதியம் 12 :10 மணியளவில் தனது உரையை தொடங்கினார் ராகுல் காந்தி
சபாநாயகருக்கு நன்றி கூறி, உரையை தொடங்கிய ராகுல்:
விவாதத்தை தொடங்கும் முன்னர், தன்னை மீண்டும் நாடாளுமன்றத்தில் அமர்த்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார், ராகுல். "கடைசியாக நான் பேசியபோது, அதானி மீது அதிக கவனம் செலுத்தி, உங்கள் மூத்த தலைவர்கள் பற்றி பேசியதால், உங்களை காயப்படுத்தியிருக்கலாம்.. அதானி குறித்து இன்று நான் பேச மாட்டேன்" என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடியை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை. பிரதமர் மோடி மணிப்பூரை ஹிந்துஸ்தானின் ஒரு பகுதியாக கருதவில்லை. மணிப்பூரை பிரதமர் இரண்டாக பிரித்துவிட்டார். " என்று கூறினார்.