Page Loader
'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு 
காங்கிரஸ் பயங்கரவாத போக்குடன் செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு 

எழுதியவர் Sindhuja SM
May 05, 2023
04:44 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் கட்சி வாக்குகளை பெறுவதற்காக பயங்கரவாதத்தின் முன் மண்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 5) குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் பெல்லாரியில் நடந்த பாஜக பேரணியில் பிரதமர் மோடி இன்று(மே 5) கலந்து கொண்டார். அந்த பேரணியில் பேசிய அவர், "பயங்கரவாத சதித்திட்டத்தை" அடிப்படையாகக் கொண்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாக குற்றசாட்டினார். காங்கிரஸ் பயங்கரவாத போக்குடன் செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 32 ஆயிரம் கேரள பெண்கள், லவ் ஜிகாத்தின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதத்தில் சேர்க்கப்பட்டதாக "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் ட்ரைலரில் கூறப்பட்டிருந்தது. இதனால், நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியது. இடதுசாரி கட்சிகளும் இஸ்லாம் மத ஆதரவாளர்களும் இதை கடுமையாக எதிர்த்தனர்.

details

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைப் பற்றி பிரதமர் மோடி பேசி இருப்பதாவது:

வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் அதிக ஒலியை எழுப்புகின்றன. ஆனால் சமூகத்திற்குள் இருந்து தீட்டப்படும் பயங்கரவாத சதித்திட்டங்களுக்கு சத்தம் இருப்பதில்லை. நீதிமன்றங்கள் கூட அது போன்ற பயங்கரவாதம் குறித்து கவலை தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட தீவிரவாத சதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி கேரளா ஸ்டோரி' படம் பற்றி இப்போதெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பயங்கரவாதத்தின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாத அமைப்புகளுக்கு முன்னால் அக்கட்சி மண்டியிட்டது. நாம் நீண்ட காலமாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டை காங்கிரஸ் ஒருபோதும் பாதுகாக்கவில்லை. கர்நாடகத்தை காங்கிரஸால் பாதுகாக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.