பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை
பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஹம்சஃபர் கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் சுத்தமான கழிப்பறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் மற்றும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட லட்சியமான ஹம்சஃபர் கொள்கையை கடந்த செவ்வாயன்று (அக்டோபர் 8) அன்று தொடங்கி வைத்தார். இந்த முயற்சியானது பயணிகளுக்கு பயண அனுபவத்தை மேம்படுத்த முயல்கிறது. தூய்மையான கழிப்பறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள், சக்கர நாற்காலிகளுக்கான ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், எரிபொருள் நிலையங்களில் தங்குமிட சேவைகள் மற்றும் பலவற்றை அறிமுகப்படுத்துவது கொள்கையில் அடங்கும்.
ஹம்சஃபர் கொள்கை குறித்த விபரங்கள்
ஹம்சஃபர் பிராண்ட் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிக்கு ஒத்ததாக மாறும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். ஒருவரிடம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால், பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்ய வேண்டும் என உறுதிபட தெரிவித்துள்ளார். இதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் உயர்தர, தரப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை நிதின் கட்கரி எடுத்துரைத்தார். இதற்கு ஏற்ற வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பராமரிக்கவும், கழிவறைகளை பொது பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவும் கட்கரி அறிவுறுத்தினார். இதை முறையாட செய்யத் தவறினால் பெட்ரோல் பங்க்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நிதின் கட்கரி எச்சரித்தார்.