தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை: உச்சநீதிமன்றத்தில் மனு
செய்தி முன்னோட்டம்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, அதிகாரப்பூர்வ கடமைகளை மீறியதாக கூறி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) கியானேஷ் குமார் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 32-ன் கீழ் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணையர்களான சுக்மீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஆட்சேபனைகளையும் மீறி, குறைந்தபட்சம் 14 சந்தர்ப்பங்களில் ஒருதலைப்பட்சமாக தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் முடிவுகளை எடுத்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை
13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்த சிறப்பு விசாரணை கோரிக்கை
பிற இரு ஆணையர்களின் ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மென்பொருள் மாற்றங்களைச் செல்லாது என அறிவிக்க மனுவில் கோரப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ முன்அனுமதியின்றி 'ECINet' மற்றும் 'ERONet' செயலிகளில் படிவம் 6-ல் மாற்றங்கள் செய்தது மற்றும் டேட்டாபேஸ்களை மத்தியமயமாக்கியது என்றும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பெயரில் மேற்கு வங்கத்தில் 16.10 லட்சம் வாக்காளர்களின் சேர்க்கைக்கு எதிராகத் தன்னிச்சையாக மேல்முறையீடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
SIR பணிகளின் போது நாடு முழுவதும் சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தடயவியல் தணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.