சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதுமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதிலுள்ள மதிப்பானது இம்மாதம் முதலே அமலுக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்கள் அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. புதிய கட்டண மதிப்பீட்டில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சதுரடி நிலம் ரூ.1000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளுக்கு ஏற்றாற்போல் இந்த வழிகாட்டி மதிப்பில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
மாவட்டங்களுக்கு ஏற்றாற்போல் மதிப்பு நிர்ணயம்
அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி, ஆவடி, தாம்பரம் போன்ற பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு ஒரு சதுரடிக்கு ரூ.800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மதிப்பீடுகள் மாற்றப்பட்டுள்ளதால் இதுவரை மதிப்பு குறைவான இடங்களின் மதிப்பு இனி விலை உயரும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, நாகர்கோயில், திருச்சி, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம், ஈரோடு போன்ற மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் ஒரு சதுரடி ரூ.700-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரூர், வேலூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகள் ரூ.600ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து பகுதிக்கான நிர்ணயம் குறித்த தகவல்
அதேபோல் கடலூர் மாநகராட்சி பகுதிகள் ரூ.300ஆகவும், தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.500ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, போன்ற பகுதிகளில் கிராம பஞ்சாயத்து பகுதி வீட்டுமனைகள் ஒரு சதுரடிக்கு ரூ.100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் ஏக்கருக்கு ரூ.5 லட்சத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து பகுதி வீட்டுமனைகள் ஒரு சதுரடிக்கு ரூ.50ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, விவசாயநிலங்கள் ஏக்கருக்கு ரூ.2 லட்சத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்
பத்திரப்பதிவு கட்டணம் 11%ல் இருந்து 9%மாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிகாட்டி மதிப்பு சில இடங்களில் 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளது. மாநில அரசு இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகளவு பணம் ஈட்டும் இத்துறையில் அதிகளவு வருவாய் ஈட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஒவ்வொரு சர்பதிவாளர் அலுவலகத்திற்கும் ஆண்டுக்கு இவ்வளவு கோடி என்னும் இலக்கு அமைக்கப்பட்டிருக்குமாம். அதன்படி முன்னர் அதிகாரபத்திரத்திற்கு ரூ.10 ஆயிரம் இருந்த நிலையில் தற்போது அது ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னர் ஆவணபக்கங்கள் எவ்வளவு இருந்தாலும் ரூ.100 தான் கட்டணம். ஆனால் தற்போது ஒரு பக்கத்துக்கு ரூ.100 என வசூலிக்கப்படவுள்ளது.
மறுசீரமைப்பு குறித்து இந்திய கட்டுமான சங்க உறுப்பினர் கருத்து
இந்த மறுசீரமைப்பு குறித்து இந்திய கட்டுமான சங்க உறுப்பினர் எம்.எல்.ஏ.ரூபி மனோகரன் கூறுகையில், முத்திரைத்தாள் கட்டணத்தினை 2% குறைந்துள்ள நிலையில் வழிகாட்டி மதிப்பீடு பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் சுமையினை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் வீடு, நிலம் வாங்குவது கணிசமாக குறையும் பட்சத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்த தொழில்சார்ந்த பல பொருட்களின் விற்பனையும் கடுமையாக பாதிப்படையும் என்று கவலை தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவர், "முதன்முதலாக ஒருவர் வீடு வாங்கும் பட்சத்தில் அவருக்கு வரி விதிக்கப்படாமல் பதிவு செய்து கொடுக்க வேண்டும். அது தான் சாமானிய மக்களுக்கு அரசு துணைநிற்பதற்கான அடையாளமாகும்" என்றும் கூறியுள்ளார்.