பேனா நினைவு சின்னம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் - பொதுப்பணித்துறை அதிகாரிகள்
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. எனினும், கடலுக்குள் 134அடி உயரத்திற்கு பேனா நினைவு சின்னம் ஒன்றினை ரூ.81 கோடி செலவில் அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. இதற்கான நுழைவுவாயில் கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கண்ணாடிப்பாலம் மூலம் மக்கள் கடல்மேல் நடந்து சென்று இந்த நினைவுச்சின்னத்தினை பார்வையிடும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. இந்த நினைவு சின்னத்திற்கு முதலில் அனைத்து தரப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், தற்போது அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளது. மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு முன்னரே அனுமதியளித்ததையடுத்து, மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும் 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும்
அதன்படி நிலத்தடி நீரினை கட்டுமான பணிகளுக்கு எடுக்கக்கூடாது. நிபுணர் குழு அமைக்கப்பட்டு திட்டத்தினை செயல்படுத்தும் பொழுது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் இதற்கான தடையில்லா சான்றினை பெற வேண்டும். ஆமை இனப்பெருக்க காலக்கட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது. ஏதேனும் பொய்யான தகவல் அளிக்கப்பட்டதாக தெரிந்தால் அனுமதி உடனே வாபஸ் பெறப்படும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மாதங்களில் இதன் கட்டுமான பணிகளை துவங்கி, ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக பேனா நினைவு சின்னத்தினை கட்டி முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. பேனா நினைவு சின்னத்தினை வடிவமைக்க ஐஐடி நிபுணர்கள் மற்றும் மற்ற நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.