மக்களவை தேர்தல் 2024: NDA கூட்டணி அநேக இடங்களில் வெற்றி
4: 50 PM: ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வயநாட்டிலும் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், மேற்கு வங்க மாநிலம் பகரம்பூர் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தோல்வியடைந்துள்ளார். திருவனந்தபுரத்தில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை வீழ்த்தி காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் பைசாபாத் எம்பியான லல்லு சிங், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரான அவதேஷ் பிரசாத்திடம் தான் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டார். இந்த சூழலில் மாலை 5.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
கேரளாவில் மலர்ந்த தாமரை
3:30 PM: கேரளாவின் முதல் பாஜக எம்பியாக சுரேஷ் கோபி வெற்றி. திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் பின்னடைவை சந்தித்து வருகிறார். 1:00 PM: பலகட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர், மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக முன்னிலையில் இருக்கிறது. தங்கள் கட்சி வெற்றி பெறுவதை உணர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்கத்தாவில் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 42 மக்களவைத் தொகுதிகளில் 29ல் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. அதே சமயம் பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன.
தவறாகும் கருத்து கணிப்பு
12:15 PM: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளரான பிரதமர் நரேந்திர மோடி 119485 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 84847 வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி 120986 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். ஆனால் தற்போதைய நிலவரிப்படி, இந்தியா கூட்டணி, கருத்துக்கணிப்பு முடிவுகளை தாண்டி பல தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதே வேளையில், NDA கூட்டணி 300 முதல் 400 தொகுதிகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டதற்கு எதிராக, 298 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது கடந்த பொதுத்தேர்தலில் இந்த கூட்டணி பெற்ற 343 பெரும்பான்மையை விட குறைவே.
இமாச்சலப் பிரதேசத்தில் BJP முன்னிலை
11:00 AM: பாரதிய ஜனதா கட்சி(BJP), ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. மண்டியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் 23,156 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேபோல், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹமிர்பூரில் தற்போது 50,152 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மறுபுறம், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்ரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஆனந்த் சர்மா 81,315 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், சிம்லாவின் தற்போதைய எம்பியுமான சுரேஷ் காஷ்யப் 26,122 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி முன்னணி
10:50 AM: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி கட்சி முன்னணி 10:00 AM: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெரும்பான்மையான 272-ஐ தாண்டி, 297 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம், எதிர்க்கட்சி கூட்டணி (இந்தியா) 208 இல் முன்னிலை வகிக்கிறது. வாரணாசி தொகுதியில் ஆரம்பகட்ட வாக்குபதிவில் சற்றே பின்னடைவை சந்தித்த பிரதமர் மோடி, தற்போது மீண்டும் முன்னிலை வகிக்கிறார். மோடி பின்னடைவை சந்தித்ததை அறிந்ததும், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. பாஜகவின் மற்றொரு ஸ்டார் வேட்பாளரான ஸ்மிரிதி இரானி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். மேற்கு வங்கம், ஒடிஷா மற்றும் உத்தர பிரதேசத்தில் தீவிர போட்டிகளமாக காணப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி முன்னிலை
9:30 AM: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி, 6,223 வாக்குகள் வித்தியாசத்தில் சற்றே பின்னடைவு 9:15 AM: இந்தியா முழுவதும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 272 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) 178 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நட்சத்திர வேட்பாளர்களான ராகுல் காந்தி, ரேபரேலி மற்றும் வயநாட்டில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். கேரளாவின் திருவனானந்தபுரம் தொகுதியில், காங்கிரஸின் சஷி தரூரை எதிர்த்து போட்டியிட ராஜீவ் சந்திரசேகர் முன்னிலை வகிக்கிறார். திரிசூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர்-அரசியல்வாதி ஆரம்பகட்ட பின்னடைவிற்கு பிறகு தற்போது முன்னிலை வகிக்கிறார்.
மக்களவை தேர்தல் 2024
8:45 AM: ஆரம்பகட்ட நிலவரப்படி, கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பாக போட்டியிட, பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை வகிக்கிறார். அதேபோல, காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா முன்னிலை வகிக்கிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை வகிக்கிறார். ஹிமாச்சல பிரதேஷ் மாண்டி தொகுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் பின்னடைவை சந்தித்துள்ளார். மறுபுறம் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி பின்னடைவை சந்தித்து வருகிறார்.
முன்னிலை நிலவரம்
8:30 AM: இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தலில், மோடி தலைமையிலான NDA அரசு இந்த முறையும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், இன்று காலை முதல், கிட்டத்தட்ட 180 இடங்களில் ஆளும் பாஜக அரசு முன்னிலையில் உள்ளது. அதேபோல, காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வயநாடு மற்றும் ரேபரேலியில் காங்கிரஸின் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார். இந்த தேர்தலின் முன்னிலை நிலவரம் காலை 9 மணி முதல் தெரியவரும் என யூகிக்கிறார்கள்.