மக்களவையில் சிறப்பு கூட்டத்தொடர்? தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
செய்தி முன்னோட்டம்
SIR மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி வரும் சூழலில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான மசோதா மக்களவையில் போதிய ஆதரவின்றித் தோல்வியடைந்தது. அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இம்முறை மசோதாவை நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு காய்களை நகர்த்தி வருகிறது:
வியூகம்
மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மத்திய அரசு வியூகம்
தற்போதைய 540 உறுப்பினர்களைக் கொண்ட கீழ் அவையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்.பி-க்களும், சிவசேனா (UBT) கட்சியின் 6 எம்.பி-க்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு மாறியுள்ளதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து காங்கிரஸுடன் ஏற்பட்ட விரிசலால் 'இந்தியா' (INDIA) கூட்டணியில் இருந்து வெளியேறிய திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் சில சிறிய பிராந்தியக் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழைக்காலக் கூட்டத்தொடர்
சிறப்பு கூட்டத்தொடர் எப்போது கூடும்?
கடந்த ஆகஸ்ட் 13 அன்று நிறைவடைந்த நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாததால், மிகக் குறுகிய கால அவகாச அறிவிப்பில் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டுவது அரசுக்கு எளிதான ஒன்றாகும்.
அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் டெல்லி சம்விதான் சதனில் நடைபெறவுள்ள 12-வது பிரிக்ஸ் மன்றக் கூட்டத்தை கருத்தில் கொண்டு, இதற்கான அதிகாரப்பூர்வ தேதிகள் ஒரு வாரத்திற்கு முன்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.