உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் "அமிர்த கால்" கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் இதில் நடைபெற உள்ளது. சிறப்பு அமர்வுக்கு எட்டு மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால விவாதத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ஒரு உருக்கமான உரையை ஆற்றினார். மேலும், முதன்முறையாக நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் தான் நுழைந்ததை அவர் நினைவு கூர்ந்தார். "இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் நம் நாட்டு மக்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பணத்தால் கட்டப்பட்டது," என்று கூறிய அவர் தனது உரையைத் தொடங்கினார். சந்திரயான்-3இன் வெற்றி மற்றும் ஜி20 உச்சி மாநாடு குறித்தும் பிரதமர் பேசினார்.
'பழைய கட்டிடம் எப்போதும் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்'
"நாம் புதிய வளாகத்திற்குச் செல்வதற்கு முன், இந்த நாடாளுமன்ற கட்டிடத்துடன் தொடர்புடைய தருணங்களை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. நாம் புதிய கட்டிடத்திற்கு மாறலாம், ஆனால் இந்த கட்டிடம் எப்போதும் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்." என்று மேலும் அவர் கூறினார். இதற்கிடையில், நாளை முதல் புதிய பார்லிமென்ட் கட்டிடத்துக்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த அமர்வு "வரலாற்று முடிவுகளின்" கூட்டமாக இருக்கும் என்றார். மக்களவை கூடியதும் காரசாரமான கருத்துப் பரிமாற்றம் தொடங்கியது. இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். அதன் பிறகு, பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.