நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் வங்கிக் கணக்குகளில் ஏதேனும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளதா என்பதை அறிய கூகுள்-பே மற்றும் பேடிஎம் நிறுவனத்தை டெல்லி காவல்துறை அணுகியுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் சமீபத்தில் நீக்கப்பட்ட 'பகத் சிங் ரசிகர் மன்றம்' என்கிற பேஸ்புக் பக்கத்தின் விவரங்களை பகிர்ந்துகொள்ளுமாறு மெட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது தில்லி காவல் துறை புலனாய்வு பிரிவு. குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரின் மொபைல் போன்கள் சேதமடைந்ததால் அவர்களின் வாட்ஸ்அப் அரட்டைகளை ரெட்ரீவ் செய்வதற்கு, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடக தளங்களை கையாளும் தாய் நிறுவனமான மெட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் இதுவரை நடந்தவை
நாடளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறலை விசாரிக்கும் குழு, கடந்த டிசம்பர் 15, 16 மற்றும் 18 ஆகிய மூன்று தேதிகளில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கியது. CRPF DG அனில் தயாள் சிங் தலைமையிலான விசாரணைக் குழுவின் குழு இதனை மேற்கொண்டது. மேலும், பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விரைவில் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 13 அன்று திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் செய்ததற்காக, யாரிடமாவது பணம் பெறப்பட்டுள்ளதா என்பதை அறிய, குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் வங்கிக் கணக்கு விவரங்களையும் டெல்லி போலீஸார் சேகரித்துள்ளனர். அதில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்கும் அடங்கும்.
பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விசாரிக்கும் டெல்லி காவல்துறை
பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்கும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் குழுக்கள், சம்பவத்தை விசாரிக்க ஆறு மாநிலங்களில் தற்போது முகாமிட்டுள்ளன. இந்த மாநிலங்களில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியவை அடங்கும். இது தவிர, 50 சுயேச்சைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் டிஜிட்டல் மற்றும் வங்கி விவரங்கள் மற்றும் பின்னணியை ஆய்வு செய்கின்றனர். நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பான மொபைல் போன்கள், உடைகள் மற்றும் காலணிகளின் எரிந்த பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் தொலைபேசிகளும் லலித் ஜாவிடம் இருந்தன. சம்பவம் நடந்த பின்னர், அவர் அதை உடைத்து, எரித்துவிட்டதாக கூறுகிறது காவல்துறை.