Page Loader
பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

எழுதியவர் Nivetha P
Sep 06, 2023
02:59 pm

செய்தி முன்னோட்டம்

திருப்பூர்-பல்லடம், கள்ளக்கிணறு என்னும் பகுதியினை சேர்ந்த பாஜக.,கிளை நிர்வாகி மோகன்ராஜ்(49), இவரது தம்பி செந்தில்குமார்(47),இவர்களது சித்தி ரத்தினாம்பாள்(58)மற்றும் அவரது தாயார் புஷ்பாவதி(67)உள்ளிட்ட நால்வர் கடந்த 4ம்தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் இவர்களை குடிபோதையில் இருந்த கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பல்லடம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். அதன்படி இதில் தொடர்புடைய திருச்சி, மனப்பாறையினை சேர்ந்த செல்லமுத்து(24)என்பவரை காவல்துறை கைது செய்து, கொலை செய்ய உபயோகித்த ஆயுதத்தினை கைப்பற்ற அழைத்து செல்கையில் தப்பியோட முயற்சி செய்த அவர், தண்ணீர் தொட்டி மீதிருந்து தவறிவிழுந்து காலில் முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை 

காவல் கண்காணிப்பாளர் அளித்த உறுதியின் பேரில் உடல்களை வாங்க ஒப்புக்கொண்ட உறவினர்கள் 

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியினை நேற்று(செப்.,5)காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடவேண்டியவை. இதனிடையே, கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து பின்னரே உடல்களை வாங்குவோம் என்று மோகன்ராஜின் அண்ணன், குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கொலை செய்த கும்பலில் இருந்த அனைவரையும் கைது செய்வோம் என உறுதியளித்ததோடு, உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க பாதுகாப்பு அளிப்பதாக கூறிய பின்னரே போராட்டத்தினை கைவிட்டு உடல்களை வாங்க ஒப்புக்கொண்டனர். அதன்பின்னர் நேற்று(செப்.,6)மாலை 4 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பல்லடம் வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.