Loading...
சீனா, துருக்கி உதவியுடன் பாகிஸ்தானின் விண்வெளி வளர்ச்சி இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்: CDS எச்சரிக்கை
முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி

சீனா, துருக்கி உதவியுடன் பாகிஸ்தானின் விண்வெளி வளர்ச்சி இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்: CDS எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2026
05:21 pm

செய்தி முன்னோட்டம்

சீனா மற்றும் துருக்கியின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தானின் விண்வெளித் திறன்கள் வேகமாக வளர்ந்து வருவது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்குப் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது என முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி எச்சரித்துள்ளார். டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்கால போர்முறை குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய அவர் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார். பாகிஸ்தானின் விண்வெளி அமைப்பான சுபார்கோ உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுடன் சீனா மற்றும் துருக்கியின் ஆதரவை பெறுவதால் இந்தியா தனது விண்வெளி சார்ந்த ராணுவ சொத்துக்களை விரைவாக வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அபாயம்

சீனாவின் உளவு மற்றும் வழிசெலுத்தல் செயற்கைக்கோள்களை பாகிஸ்தான் பயன்படுத்தும் அபாயம்

பாகிஸ்தானின் செயற்கைக்கோள் ஏவும் திறனை விட சீனாவின் அதிநவீன விண்வெளித் தொழில்நுட்பங்களை இஸ்லாமாபாத் பயன்படுத்திக்கொள்ளும் அபாயமே இந்தியாவுக்கு பெரிய சவாலாக உள்ளது என ஜெனரல் சுப்பிரமணி சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக உளவு தகவல்கள் சேகரிப்பு கண்காணிப்பு வேவு பார்த்தல் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளில் சீனா கொண்டுள்ள அபரிமிதமான திறன்களைப் பாகிஸ்தான் தனது போர்க்கள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடும் என அவர் கூறினார்.

எனவே இந்தியாவின் எதிர்காலப் பாதுகாப்புத் திட்டமிடலில் சீனா பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் இந்த விண்வெளி ஒத்துழைப்பைக் கட்டாயம் கணக்கில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ராணுவ செயற்கைக்கோள்கள்

₹26,968 கோடியில் 52 ராணுவ செயற்கைக்கோள்களை ஏவும் இந்தியாவின் SBS Phase-III திட்டம்

இந்தியா தனது விண்வெளித் திறனை சீனாவுடன் நேரடியாக ஒப்பிட்டு போட்டியிடத் தேவையில்லை என்றும் நமது எல்லைகளைத் துல்லியமாகக் கண்காணிக்கப் போதுமான செயற்கைக்கோள்களை வைத்திருப்பதே முக்கியம் என்றும் முப்படைத் தலைமைத் தளபதி விளக்கமளித்தார்.

இதற்காக 26 ஆயிரத்து 968 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விண்வெளி சார்ந்த கண்காணிப்பு கட்டம் மூன்று திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 52 பிரத்யேக ராணுவ செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

இதில் 21 செயற்கைக்கோள்களை இஸ்ரோ நிறுவனமும் மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களை இந்தியத் தனியார் நிறுவனங்களும் இணைந்து உருவாக்க உள்ளன.

ADVERTISEMENT

எலக்ட்ரானிக் போர்முறை

சீனாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் எலக்ட்ரானிக் போர்முறை குறித்த எச்சரிக்கை

இதேபோல் செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை முடக்கும் எலக்ட்ரானிக் போர்முறைத் தொழில்நுட்பங்களை சீனா வேகமாக வளர்த்து வருவதையும் ஜெனரல் சுப்பிரமணி சுட்டிக்காட்டினார்.

எதிர்காலப் போர்க்களத்தில் கண்காணிக்கப்படும் எந்தவொரு இலக்கும் உடனடியாகத் தாக்கி அழிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் எச்சரித்தார்.

இதன் காரணமாகவே பாதுகாப்பு விண்வெளி முகமை மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகத்தின் கீழ் இந்தியாவின் விண்வெளி பாதுகாப்புக் கட்டமைப்பு வேகமாக நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT