Loading...
தொகுதி மறுவரையறை மசோதாவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த முக்கியப் பிரிவு: என்ன சொல்கிறது மசோதா?
தொகுதி மறுவரையறை மசோதாவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த முக்கியப் பிரிவு

தொகுதி மறுவரையறை மசோதாவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த முக்கியப் பிரிவு: என்ன சொல்கிறது மசோதா?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2026
07:43 pm

செய்தி முன்னோட்டம்

வரும் நவம்பர் 30 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை இரண்டாம் மசோதா 2026-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் பகுதி குறித்த முக்கிய சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் பிரிவு 3(4)-ன் கீழ் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதி ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டவுடன் அப்பகுதியின் சட்டப்பேரவைத் தொகுதிகளை இந்திய தேர்தல் ஆணையமே மறுவரையறை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மசோதாவில் பிஓகே என்ற சுருக்கப் பெயருக்கு பதிலாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

தனி ஆணையத்திற்கு பதிலாக தேர்தல் ஆணையம் மற்றும் 24 இடங்கள் குறித்த நிலைப்பாடு

நாட்டின் பிற பகுதிகளில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையர் அடங்கிய தனி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும் என மசோதா கூறுகிறது.

ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதி விடுபடும்போது அங்கு இந்திய தேர்தல் ஆணையமே நேரடியாக மறுவரையறை ஆணையமாக செயல்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த பிரிவு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதோடு அப்பகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 24 இடங்களுக்கு 50 சதவீத இட உயர்வு பொருந்துமா என்பது குறித்து மசோதாவில் விளக்கப்படவில்லை.

புதிய திருத்த மசோதா

டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கான புதிய திருத்த மசோதா

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு 132-வது திருத்த மசோதாவுக்கு ஏற்ப யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்த இரண்டாம் மசோதாவையும் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

சட்டப்பேரவைகளைக் கொண்ட டெல்லி ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களின் சட்டங்களில் இதன் மூலம் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

புதிய தொகுதி மறுவரையறை மற்றும் 50 சதவீத இட உயர்வுக்குப் பிறகு இந்த மூன்று யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளிலும் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ADVERTISEMENT

புதிய மசோதாக்கள்

ஏப்ரல் மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டு திங்கட்கிழமை தாக்கலாகும் புதிய மசோதாக்கள்

முன்னதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அரசியலமைப்பு 131-வது திருத்த மசோதாவுடன் இணைந்து தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேச சட்டத் திருத்த மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் 131-வது திருத்த மசோதா போதிய பெரும்பான்மை இன்றித் தோல்வியடைந்ததால் மற்ற இரண்டு மசோதாக்களும் வாக்கெடுப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தன.

தற்போது அந்தப் பழைய மசோதாக்களைத் திரும்பப் பெற்றுவிட்டு வரும் நவம்பர் 30 திங்கட்கிழமை புதிய திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

ADVERTISEMENT