Loading...
போலி இந்திய அடையாளங்கள், டீப்ஃபேக் வீடியோக்கள்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் தகவல் போர் அம்பலம்
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் தகவல் போர் அம்பலம்

போலி இந்திய அடையாளங்கள், டீப்ஃபேக் வீடியோக்கள்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்தும் தகவல் போர் அம்பலம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2026
06:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அரசியல் தலைமை ராணுவக் கட்டமைப்பு மற்றும் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான போலி சமூக வலைதளக் கணக்குகள் மூலம் தீவிரமான தவறான தகவல் பிரசாரத்தை நடத்தி வருவது பாதுகாப்பு அமைப்புகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. டீப்ஃபேக் வீடியோக்கள் பழைய காட்சிகள் மற்றும் சாதாரண இந்தியர்களை போன்ற போலி அடையாளங்களை பயன்படுத்தி இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல போலி கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டாலும் தானியங்கி முறையில் புதிய கணக்குகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டீப்ஃபேக் வீடியோக்கள்

ராணுவத் தலைமையின் நம்பகத்தன்மையைக் குலைக்க உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்கள்

இந்திய பாதுகாப்புப் படைகளின் நம்பகத்தன்மையை சிதைக்கும் வகையில் பல போலி வீடியோக்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக வான் தரை கடல் மற்றும் சைபர் போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னிலையில் இருப்பதாக முப்படைத் தலைமைத் தளபதி ஒப்புக்கொண்டது போன்ற மாற்றப்பட்ட வீடியோவும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோவும் பாதுகாப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் ராணுவத் தளபதி மாற்றப்பட உள்ளதாகவும் சீக்கிய ரெஜிமென்ட் அதிகாரி மெக்சிகோவில் குற்ற செயலில் சிக்கியதாகவும் தொடர்பில்லாத படங்களைப் பயன்படுத்திப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.

ஜோடிக்கப்பட்ட பொய் செய்திகள்

காசியாபாத், கொல்கத்தா பெயரில் மதக் கலவரத்தைத் தூண்ட ஜோடிக்கப்பட்ட பொய் செய்திகள்

மத்தியப் பிரதேசம் ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கடந்த 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் பதிவான பழைய வீடியோக்களை நவம்பர் 2026-ல் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் போல போலித் தலைப்புகளுடன் பகிர்ந்து பதற்றத்தை உருவாக்க முயற்சி நடந்துள்ளது.

குறிப்பாக காசியாபாத்தில் 5 மசூதிகள் இடிக்கப்பட்டு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கொல்கத்தாவில் தொழுகையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.

உள்ளூர் நிகழ்வுகளைத் திரித்து தேசிய அளவிலான மத மற்றும் சாதிப் பிரிவினைகளாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ADVERTISEMENT

போலி இந்திய கணக்குகள்

'Anushi Tiwari' போன்ற போலி இந்திய கணக்குகளும் பாகிஸ்தான் ISPR நெட்வொர்க்கும்

இந்திய பயனர்களை எளிதில் நம்பவைப்பதற்காக இந்திய பெயர்கள் சாதி மற்றும் பிராந்திய அடையாளங்களுடன் கூடிய போலி கணக்குகள் இயக்கப்படுகின்றன.

உதாரணமாக அனுஷி திவாரி என்ற பெயரில் இயங்கிய கணக்குகள் ஒரே வாரத்தில் காசியாபாத் மத விவகாரம் முதல் கர்த்தார்பூர் மற்றும் சீக்கிய அடையாளம் வரை பல்வேறு உணர்திறன் மிக்க தலைப்புகளில் பதிவிட்டுள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான ஐஎஸ்பிஆர் 2015 முதல் இளைஞர்களுக்கு சமூக வலைதள இன்டர்ன்ஷிப் வழங்கி மீம்ஸ்கள் மற்றும் போலி வீடியோக்களை உருவாக்கி வருவதாகவும் சமூக வலைதளப் பயனர்கள் இத்தகைய வதந்திகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

ADVERTISEMENT